இங்கிலாந்தில் 700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் பல ஆண்டுகளாக திட்டமிட்டபடி ஒரு கும்பலால் தொடர்ந்து இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகவும், அதிகாரிகளின் அலட்சியமே இந்த அவலநிலைக்கு காரணம் என்றும் அவர் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

மேலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், இதேபோன்று இன்னும் ஏராளமான சிறுமிகளும், பெண்களும் ஒரு பெரிய கும்பலால் இன வெறியால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி உண்மையையும் அவர் உடைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காததோடு, காவல் துறையினரும் சமூக நல அமைப்புகளும் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க இங்கிலாந்து அரசு உடனடியாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.