பெண்கள் தற்பொழுது ஆண்களுக்கு நிகராகப் பல துறைகளிலும் சாதித்து வரும் வேளையில், தங்களது அசாத்திய விடாமுயற்சியால் கரும்பு வெட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள்கள் 4 பேர் ஒரே நேரத்தில் மும்பை போலீஸ் படையில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் மாவட்டம் என்று அறியப்படும் பீட் மாவட்டத்தில் உள்ள ஜிவாசிவாடி என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த ஹனுமந்த் சௌரே என்பவரின் மகள்களான உஷா, அர்ச்சனா, கீதாஞ்சலி மற்றும் சீத்தல் ஆகிய 4 அக்கா-தங்கைகளே இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியவர்கள் ஆவர்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே குழந்தை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண்ட அந்த கிராமத்தில், இத்தனை கடுமையான வறுமைச் சூழலிலும் இந்த 4 பெண்களும் தங்களது லட்சியத்தில் உறுதியாக இருந்து தற்பொழுது மும்பை காவல்துறையில் சேர்ந்து கிராமத்திற்கே ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளனர்.

தங்களது மகள்களின் இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர்களது தாய், “நாங்கள் கரும்பு வெட்டும் வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டோம், அந்த நிலைமை என் மகள்களுக்கு வரக்கூடாது, அவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்தோம், அது இன்று நனவாகியுள்ளது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு ஆடை போன்ற ஆடம்பர வசதிகளைக் குறைத்துக்கொண்டு, படிப்பிற்கு எவ்வித குறையும் வைக்காமல் வளர்த்த தங்களது பெற்றோரையே இந்த வெற்றிக்கு முழு முதற்காரணமாகக் கூறும் இந்த 4 பெண் போலீசாரும், இனி தங்களது கடமையை மிகவும் நேர்மையான முறையில் செய்யப் போவதாகப் பெருமிதத்துடன் உறுதி அளித்துள்ளனர்.

இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சாதனைத் தகவல், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதிலும் இருந்து இந்த வீராங்கனைகளுக்குப் பாராட்டுகளைக் குவிக்கச் செய்து வருகிறது.