மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுபம் குணே, ஒரு முக்கியமான சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அதிகாலை 7 மணிக்கே அவசரமாகப் புறப்பட்டுள்ளார். நேரமாகிவிட்ட பதற்றத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர், கூகுள் பே செயலி மூலம் ஆட்டோ கட்டணத்தைச் செலுத்த முயன்றார். அப்போது, அவசரத்தில் ஆட்டோ கட்டணமான 156 ரூபாய்க்குப் பதிலாக, தவறுதலாக 15,682 ரூபாயை ஓட்டுநரின் கணக்கிற்கு அனுப்பிவிட்டு, பணப் பரிவர்த்தனைத் திரையைக் கூடச் சரிபார்க்காமல் கட்டிடத்திற்குள் ஓடியுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு தனது தவறை உணர்ந்து சுபம் குணே பதற்றமடைந்த நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை அவரை நெகிழச் செய்துள்ளது. தவறுதலாகத் தன் கணக்கிற்கு வந்த கூடுதல் தொகையைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அந்த ஆட்டோ ஓட்டுநர் சுபம் குணேயிடம் நேர்மையாகத் திருப்பி ஒப்படைத்துள்ளார். தற்போதைய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் காலத்தில், அவசரத்தில் நடக்கும் தவறுகளுக்கு மத்தியில் அந்த எளிய ஆட்டோ ஓட்டுநரின் உயர் குணத்தைப் பாராட்டி சுபம் குணே தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது
