பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ அவசரச் சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3:30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அறை முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்ததைக் கண்டு சற்றும் பதறாத 95 வயது மூதாட்டி ராதா தேவி, தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை அவரே தைரியமாக கழற்றி எறிந்துவிட்டு தட்டுத்தடுமாறி கீழே ஓடிவந்து நர்சிடம் தகவல் கொடுத்துள்ளார்.
மூதாட்டி கொடுத்த அவசரத் தகவலால் அலர்ட்டான மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததை அடுத்து, அதிகாரிகள் விரைந்து வந்து ஐசியூவில் இருந்த 15 முதல் 20 நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 4 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆனாலும், சுவாசப் பிரச்சனையுடன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த 95 வயது பாட்டி, தனது அசாத்திய துணிச்சலால் நள்ளிரவில் சமயோசிதமாகச் செயல்பட்டு 20-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
