பீகார் மாநிலம் அராரியாவில், தனது கள்ளத்தொடர்பை மறைப்பதற்காக 15 வயது பெற்ற மகளையே தாயும் அவரது மருமகனும் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஷைஸ்தா பர்வீனுக்கும், அவரை விட 10 வயது இளையவரான அபு நசர் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த சட்டவிரோத உறவை எவரும் சந்தேகிக்காமல் இருக்கவும், ஷைஸ்தாவின் வீட்டிற்கு அபு நசர் சட்டப்பூர்வமாக வந்து போவதற்காகவும் ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 2026-ல் ஷைஸ்தாவின் மைனர் மகளான சாஜிதாவை, அபு நசருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகும் இவர்களது தவறான உறவு தொடர்ந்து நீடித்த நிலையில், ஒரு நாள் தனது தாயும் கணவனும் தனிமையில் நெருக்கமாக இருந்ததை சாஜிதா நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்துத் தன் தந்தையிடம் கூறப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் தங்களது ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என்று ஆத்திரமடைந்த தாயும் மருமகனும் சேர்ந்து, சாஜிதாவை வழியிலிருந்து அகற்ற முடிவு செய்து கொலைத் திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த மே 1 ஆம் தேதி சாஜிதாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக நாடகமாடி, அவரை பைக் மூலம் அபு நசரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவருமாகச் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர், சாஜிதாவின் சடலத்தை அவரது தந்தை முதஷீரின் வீட்டிற்கு எடுத்து வந்து, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சாஜிதா இறந்துவிட்டதாகக் கூறி, யாருக்கும் தெரியாமல் உடனே அடக்கம் செய்ய அவசரப்பட்டுள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த தந்தை முதஷீர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாஜிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலை செய்த தாய் ஷைஸ்தா மற்றும் கணவன் அபு நசர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
