பஞ்சாப் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் மற்றும் அவரது வயதான தாயாரை வீட்டின் சுவரைத் தாண்டி குதித்து ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகா மாவட்டத்தின் பாகாபுரானா பகுதியிலுள்ள சன்னுவாலா கிராமத்தைச் சேர்ந்த வீர் சிங் என்பவர், கால்வாய் துறையில் ரீடராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் ஹர்பிரீத் கவுர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 9 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், தனது மனைவி வேறொரு ஆணுடன் அலைபேசியில் பேசுவதைக் கணவர் வீர் சிங் கண்டித்ததால், தம்பதியினருக்குஇடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் பெண்ணின் சகோதரர் சந்தீப் சிங் என்கிற காக்கா மற்றும் அவரது உறவினர்கள் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டின் பிரதான வாயில் சுவரைத் தாண்டி குதித்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், படுக்கையறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த கும்பல், வீர் சிங் மற்றும் அவரது 65 வயது தாயார் ஹர்பன்ஸ் கவுர் ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமராக்களில் இந்த கொடூரத் தாக்குதல் காட்சிகள் அனைத்தும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில், மனைவி ஹர்பிரீத் கவுர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.