ஆந்திரப்பிரதேச மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டம், வெலக வலசா கிராமத்தில் நடைபெற்ற மிகக் கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தில் பலருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் என்ற வாலிபர்தான் பில்லி சூனியம் வைத்து காரணம் என்று ஊர் மக்கள் சந்தேகப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சிலர், ரமேஷை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்று, அவரின் உடலை எரித்து தடயங்களை அழிக்கவும் அவர்கள் திட்டமிட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பாதியளவு எரிந்த நிலையில் இருந்த ரமேஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ரமேஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 16 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூடநம்பிக்கையின் காரணமாக ஒரு வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.