தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாகப் பெரும் அனலைக் கிளப்பி வரும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், “மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, அவர்கள் அரசியல் மட்டுமே செய்வார்கள்” என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாகவே மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்றும், இதில் புதிதாகப் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்றும் மிக அலட்சியமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கனவே இறுதித் தீர்ப்பளித்துவிட்டது என்று குறிப்பிட்ட கர்நாடக முதல்வர், தாங்கள் முழுமையாகச் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருவதாகவும், அணை கட்டும் பணிகளில் பின்வாங்கப் போவதில்லை என்றும் உறுதியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு தரப்புமே காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் வேளையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிகப்பெரிய ஹாட் டாபிக்காக மாறி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
