கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிராவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர், தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது மனைவி ஹசீனா பீவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மேலும் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், போலீஸ் சமரசத்திற்குப் பிறகும் இவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவில்லை. நேற்று அதிகாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் திடீரென கத்தியால் ஹசீனா பீவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இந்த கோரக் காட்சியை நேரில் கண்ட குழந்தைகள் கதறி அழுதனர் ரத்த வெள்ளத்தில் துடித்த ஹசீனா பீவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பிறகு சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட, இது குறித்து வழக்குப்பதிவு செய்த மண்ணந்தலை போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.