சத்தீஸ்கர் மாநிலம் கௌரிலா பகுதியில், கணவனை இழந்த பெண் ஒருவரை அவரது உறவுமுறை மைத்துனர்கள் இருவர் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ஆதரவற்ற சூழலில் தனியாக வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணின் நிலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது.

இந்த அநீதிக்கு எதிராக அந்தப் பெண் ஆரம்பத்தில் புகார் அளிக்க முயன்றபோது சில காரணங்களால் நடவடிக்கை தாமதமான நிலையில், தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஊரிலிருந்து திரும்பியதை அடுத்து, அவரது புகாரின் பேரில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல் நிலைய பொறுப்பாளர் ஷனிப் ராத்ரே, “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் இரண்டு மைத்துனர்கள் மீதும் தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டு, வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  தலைமறைவாக உள்ள அந்த இரண்டு காமுகர்களையும் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் இருவரையும் மிக விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதி அளித்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.