சென்னையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட மோதல், பெரும் கொடூரமாக முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் பாரில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரை ஏற்றி அவரைப் படுகொலை செய்தது. இந்த விபத்தில் அவருடன் வந்த சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலையைச் செய்த கும்பல், தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகக் காரில் இருந்த கொடி மற்றும் நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டு கோயம்பேட்டில் காரை நிறுத்திவிட்டுத் தப்பியோடினர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் உட்பட பாலகுரு, கிஷோர், சுமன், விமல், மோகன சுந்தரம், ராகுல், ஜோஷ்வா ஆகிய 7 பேரையும் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

இவர்களில் மூன்று பேர் புதுச்சேரியிலும், மற்றவர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வைத்துப் பிடிக்கப்பட்டனர். இந்த விபரீத மோதல் மற்றும் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாகச் சம்பந்தப்பட்ட அந்தத் தனியார் மதுபான பாருக்கு அதிகாரிகள் தற்போது அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர்.