அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சில முக்கியக் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மதுரையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, வேலூரில் செங்கல் சூளையில் நடந்த பண மிரட்டல், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளி மீதான தாக்குதல் மற்றும் செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது ஆகிய நான்கு சம்பவங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

இந்தத் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக நிர்வாகிகள் என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஒற்றுமை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்தான் தவெக கட்சியில் நிறைந்திருக்கிறார்களா, அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற காரியங்களில் துணிகிறார்களா என்பதைப் புரியவில்லை என்று டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த விவகாரம் குறித்து தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய் உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.