ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் விபத்து போலக் காட்டுவதற்காகக் காரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீராம்புரா கிராமம் அருகே நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கார்பியோ கார் தீப்பற்றி எரிவதைக் கண்ட கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அந்த காரில் இருந்து மூன்று கருகிய உடல்களும், அருகில் இருந்த வயல்வெளியில் இருந்து ஒரு உடலும் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் முன்னாள் சர்பஞ்ச் ராம் சிங் சவுத்ரி, அவரது தாய் மற்றும் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இது ஏதோ விபத்து என்றுதான் முதலில் கருதப்பட்டது, ஆனால் தடயவியல் சோதனையில் உடல்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது தெரியவந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில், ராம் சிங்கின் முதல் மனைவி சுனிதா சவுத்ரி, தனது மகள் மற்றும் மைனர் மகனுடன் சேர்ந்து இந்தத் துரோகத்தைச் செய்தது அம்பலமானது. ராம் சிங்கின் இரண்டாவது திருமணத்தால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக ஏற்பட்ட தகராறு காரணமாக, முதல் மனைவியும் அவரது பிள்ளைகளும் சேர்ந்து நான்கு பேரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைக்க உடல்களைக் காரில் ஏற்றி நெடுஞ்சாலையில் வைத்துத் தீ வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அழுவது போல நாடகமாடி போலீசாரை திசைதிருப்பவும் சுனிதா முயன்றுள்ளார்.
தற்போது அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் சுனிதாவையும் அவரது இரு பிள்ளைகளையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
