தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில், விழுப்புரம் மாவட்டம் சந்தித்த பின்னடைவு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு விசிக எம்பி ரவிக்குமார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
2026 மே மாதம் வெளியான தேர்வு முடிவுகளின்படி, பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 85.92 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 38-வது கடைசி இடத்தைப் பிடித்து பெரும் சரிவைச் சந்தித்தது.
அதேபோல் பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில சராசரிக்கு அருகில் இருந்தாலும், வட மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விழுப்புரம் மாவட்டத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.
இதுகுறித்து ரவிக்குமார் எம்பி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியரிடம் ஆலோசித்து விட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக் கோரி அமைச்சருக்கு இணையத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
நேற்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும், ரவிக்குமாரின் பதிவை உடனே கவனித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசி, கல்வி நிலையை உயர்த்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த விபரங்களைத் தொலைபேசி வாயிலாக எம்பி ரவிக்குமாரிடமும் பகிர்ந்து கொண்டார்.
மாணவர்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்கக் கல்வித்துறை 1 முதல் 38 வரையிலான முழுமையான ரேங்க் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை என்றாலும், மாவட்டத்தின் இந்தச் சரிவைச் சரிசெய்ய அமைச்சர் காட்டிய விரைவான அக்கறைக்கு விழுப்புரம் மாவட்ட மக்கள் சார்பில் ரவிக்குமார் எம்பி தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
