தமிழகக் கோவில்களில் விஐபி  தரிசனத்திற்காகக் கோவில் நடைமுறைகளை மாற்றுவதற்கும், சிறப்பு கட்டண தரிசன முறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, “கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமம் தான்; அப்படியிருக்கும்போது விஐபி தரிசனம் ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக நடை சாத்தப்படும் நேரத்தைத் தாண்டி, அமைச்சர் ஒருவரின் வருகைக்காக நடை திறந்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அமைச்சர்களுக்காகவோ அல்லது எம்எல்ஏக்களுக்காகவோ கடவுள் காத்திருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும், விஐபிக்களின் வருகையால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்களுக்கு என்று தனியாக ஒரு நேரத்தை ஏன் ஒதுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஐபி வருகைக்காகக் கோவிலின் வழக்கமான பூஜைகளிலோ அல்லது நடை சாத்தப்படும் நேரங்களிலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

“பணம் கொடுத்தால் கடவுளைக் கட்டியணைக்க முடியுமா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தமிழ்நாட்டு ஆன்மீகத் தலங்களில் விஐபி தரிசனத்திற்கான தனி நேர ஒதுக்கீடு குறித்துப் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.