உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கிரா சுவோரோவா என்ற 23 வயது இளம் பெண், அங்குள்ள யமுனா கினாரா சாலையில் தனது நண்பர்களுடன் நடந்து சென்றபோது தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

ஆக்ரா நகரின் சாலைகளில் ஒருபோதும் நடந்து செல்ல வேண்டாம்  என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த 23 வினாடி வீடியோவில், அவர் நடந்து செல்லும்போது சில ஆட்டோ ஓட்டுநர்களும், உள்ளூர் நபர்களும் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து “மேடம், எக்ஸ்கியூஸ் மீ” என்று அழைப்பது பதிவாகியுள்ளது.

 

இதனால் தான் கடும் அச்சுறுத்தலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானதை அடுத்து, ஆக்ரா காவல்துறை இதற்கு அதிகாரப்பூர்வ மறுப்பு மற்றும் விளக்கத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் சுகன்யா சர்மா கூறுகையில், “அந்த வெளிநாட்டுப் பயணிக்கு பொதுவெளியில் எவ்வித பாலியல் தொல்லையோ அல்லது அத்துமீறலோ நடக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது சவாரி-க்காக அவரை அணுகியதே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், விருந்தினரே தெய்வம் என்ற உயரிய கோட்பாட்டின்படி வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆக்ரா போலீஸ் உறுதியாக உள்ளதாகவும், இந்த விவகாரத்தை வைத்து வதந்திகளையும், தவறான தகவல்களையும் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.