ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் (Dungarpur) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவருக்குக் காலாவதியான (Expired) குளுக்கோஸ் மற்றும் சோடியம் குளோரைடு ட்ரிப் பாட்டில் ஏற்றிய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவத் துறையிலும் மாபெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அப்பெண்டிக்ஸ் (Appendix) ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், மறுநாள் காலையில் அங்கிருந்த நர்ஸ்கள் அவருக்குக் குளுக்கோஸ் பாட்டிலை ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த நோயாளியின் கணவர் தற்செயலாக அந்த பாட்டிலை உற்று நோக்கியபோது, அதில் ‘மார்ச் 2026’ என்றே எக்ஸ்பைரி டேட் போடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
உடனடியாக அவர் நர்ஸ்கள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் சென்று மெகா பஞ்சாயத்தைக் கூட்டியதோடு, தவறை மறைக்க பாட்டிலைக் கழற்ற வந்த நர்ஸ்களையும் தடுத்து நிறுத்தி ஆதாரமாகப் பிடித்துள்ளார்.
இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, தற்போது அந்தப் பெண் பத்திரமாக இருப்பதாகவும், இந்தத் தீவிர அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிய அவசரக் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு ஸ்டாக்குகளும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
