குஜராத்தின் புகழ்பெற்ற கிர் காடுகளில் கடந்த 10 நாட்களில் 4 குட்டிகள் மற்றும் 3 பெரிய சிங்கங்கள் என மொத்தம் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குஜராத் வனத்துறை அமைச்சர் அர்ஜுன் மொத்வாடியா மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரிய சிங்கங்கள் இயற்கை காரணங்களால் இறந்திருக்கலாம் என்றும், குட்டிகளுக்கு ‘பேபீசியா’ என்ற ஒட்டுண்ணி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒட்டுண்ணித் தொற்று விலங்குகளின் சிவப்பு ரத்த அணுக்களைக் கடுமையாகப் பாதித்து மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டும் இதே போன்ற தொற்றால் 11 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்பட்ட 17 சிங்கங்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டுத் தனிமைப்படுத்தித் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவற்றுக்கு புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளும், கால்நடை பரிசோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், உயிரிழந்த சிங்கங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மற்ற சிங்கங்கள் பாதுகாப்பான வேறிடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாக வனத்துறை உறுதியளித்துள்ளது.
