ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்.) கட்சித் தொண்டர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். தாடேபள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், சமீபத்தில் தேர்தல் நடந்த தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
வாக்குகள் குறைந்தாலும் அதிகரித்தாலும் அது தேர்தலில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அந்த இரு மாநில தேர்தல் முடிவுகளே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் 45,982 பேரின் பெயர்களும், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதால் அவர்கள் தோல்வியடைந்ததாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி எவ்வளவு முக்கியமானது என்பதைத் தொண்டர்களுக்குப் புரிய வைக்கவே இந்த உதாரணங்களைக் கூறுவதாகத் தெரிவித்த அவர், தொண்டர்கள் அனைவரும் இந்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
