இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. “நாட்டின் இளைஞர்களை ஏமாற்றக் கூடாது” என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டதாவது, இது வெறும் ஒரு மாணவர் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. ஒரு முழு குடும்பத்தின் உணர்வுகளும், அவர்களது காலங்காலமான கடின உழைப்பும் இதில் அடங்கியுள்ளது. UPSC தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் ஏற்படுவதில்லையே, அப்படியிருக்க நீட் தேர்வில் மட்டும் ஏன் இந்தத் தோல்வி? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தேர்வு முகமையைக் கண்டித்தனர்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வை அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்த திடீர் ரத்து நடவடிக்கையால், நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்காகக் காத்திருந்த சுமார் 25 லட்சம் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் நீட் மறுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான புதிய தேதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமைஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீட் முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வு முகமையின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து உன்னிப்பாக விசாரித்து வருகிறது.