ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஸ்ரீராமபுரா கிராமத்தில், முன்னாள் சர்பஞ்ச் ராம்சிங் சவுத்ரி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, காரோடு எரித்து சாம்பலாக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பலிவாங்கலுக்குக் காரணமான ராம்சிங் சவுத்ரியின் முதல் மனைவி சுனிதா மற்றும் அவரது மகள் சரிதா ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கில் தொடர்புடைய ஆன்லைன் ஆயுதக் கொள்முதல் மற்றும் கொலைச் சதித் திட்டத்தின் பின்னணியை முழுமையாக விசாரிக்க, நீதிமன்றம் இருவரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
இந்த வழக்கில் சுனிதாவின் மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை நடந்த இரவன்று தனது தந்தைக்கு பீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, தாயிடம் கொலையை அரங்கேற்றக் கூறியதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கொல்லப்பட்ட ராம்சிங் சவுத்ரி ஒரு ஹிஸ்டரி ஷீட்டர் என்பதும், அவர் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அவருக்கும் அவரது முதல் மனைவி சுனிதாவிற்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், ராம்சிங் சவுத்ரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த சுனிதா தனது பிள்ளைகளுடன் சேர்ந்து இந்த கொலைச் சதியைத் தீட்டியுள்ளார்.
அதன்படி, ராம்சிங் சவுத்ரி, அவரது வயதான தாய் புசி தேவி, இரண்டாவது மனைவி சுர்ஞான் தேவி மற்றும் அவரது அத்தை மகள் மஹிமா ஆகிய 4 பேரைக் கொடூரமாகக் கொலை செய்து, டிராக்டரிலிருந்து எடுக்கப்பட்ட டீசலை ஊற்றி காரோடு எரித்துள்ளனர். இக்கொலையை விபத்து போலக் காட்டுவதற்காக, சுனிதா வீட்டிற்கு வந்து மயங்கி விழுந்தது போலவும், கதறி அழுதது போலவும் நாடகமாடியதும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
