பெங்களூரு பகுதியில் வசிக்கும் சவுரப் துபே என்ற கணினி பொறியாளர், டேட்டிங் செயலி மூலம் பழகிய பெண்ணிடம் ₹1.66 கோடியை இழந்து ஏமாந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
இந்தச் சூழலில், தான் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகக் கூறி, சவுரப்பையும் அதில் பணம் போடுமாறு ரியா வற்புறுத்தியுள்ளார். வருங்கால மனைவி என்று நம்பிய சவுரப், கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ரியா கூறிய வங்கி கணக்குகளில் மொத்தம் ₹1.66 கோடியை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவசரத் தேவைக்காகத் தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, அதில் வெறும் ₹4,250 மட்டுமே இருந்துள்ளது.
அதிர்ச்சியடைந்து ரியாவைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. டேட்டிங் செயலி மூலம் காதலிப்பது போல நடித்து தன்னிடம் ₹1.66 கோடி மோசடி செய்ததை உணர்ந்த சவுரப், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள இளம்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
