ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்தப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடிச் சென்ற அந்தச் சிறுமியை, கடத்தியவர்கள் இரண்டு முறை விற்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு நபர்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
மேலும் கர்ப்பமான நிலையில் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட அந்தச் சிறுமி, பெரும் போராட்டத்திற்குப் பிறகு தப்பித்து ஒடிசா திரும்பியுள்ளார். தனது துயரமான அனுபவங்களை வெளிப்படுத்திய அந்தச் சிறுமி, தான் சிக்கியிருந்த வலையமைப்பைப் பற்றிய தகவல்களைப் போலீசாரிடம் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஒடிசா போலீசார், சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்ற நபரைத் தேடி வருகின்றனர். மேலும், மாநிலங்களுக்கு இடையிலான இத்தகைய மனிதக் கடத்தல் கும்பல்களைக் கண்டறிய விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
