உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாம்பாக் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில், இன்றுகாலை சுமார் 70 அடி நீளமுள்ள பிரம்மாண்ட டின் ஷெட் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த பூபேந்திரா என்ற பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) மற்றும் அபிஷேக், சாஹில் ஆகிய இரண்டு பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தனர். நடைமேடையிலிருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாலும்,மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து பகுதிக்கு சற்று முன்பாகவே நிறுத்தப்பட்டதாலும் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு, இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டனர். இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட டிடிஇ பூபேந்திரா உள்ளிட்ட மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில் குமார் வர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளின் போது, டின் ஷெட்டைத் தாங்கி நின்ற சில தூண்கள் மற்றும் கைப்பிடிகள் தளர்த்தப்பட்டதே இந்த பலவீனமான கட்டடச் சரிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்த நிறுவனம் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்தைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள காங்கிரஸ் கட்சி, பொதுமக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து தரம் குறைந்த கட்டுமானங்களை ஊக்குவிக்கும் “ஊழல் மாடல்” ஆட்சியை பாஜக நடத்தி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.