நேபாளத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் அஸ்மிதா தமாங் என்ற பள்ளி மாணவியின் உருக்கமான மற்றும் நெஞ்சை உலுக்கும் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் சர்வதேச அளவில் வைரலாகி பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. மற்ற குழந்தைகள் தங்களது பள்ளி, நண்பர்கள், கனவுகள் என வாழும் வயதில், அஸ்மிதா தனது படிப்பையும் கவனித்துக் கொண்டு, தனக்கு இளையவர்களான மூன்று தம்பிகளையும் தாயாக மாறி வளர்த்து வருகிறார்.

பள்ளி வகுப்பறையில் ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டு பாடம் கவனிக்கும் அவளது எமோஷனல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ​வீட்டுப் பொறுப்புகள் மற்றும் படிப்பின் சுமை தாங்காமல், ஒருகட்டத்தில் அந்தச் சிறுமி வகுப்பறையிலேயே பாரம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழும் காட்சி பார்ப்பவர் எவரையும் கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அஸ்மிதாவின் அசாத்திய தைரியம், தியாகம் மற்றும் முதிர்ச்சியைப் பாராட்டி வரும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள், அதே சமயம் இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு அரசு மற்றும் சமூகம் உதவ முன்வர வேண்டும் என்றும், இந்தச் சிறிய வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புகளைச் சுமக்க நேரிட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.