சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்காக இளைஞர்கள் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ‘official_saleh_boy’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் பிஸியான பொதுச்சாலையில் அதிவேகமாக சைக்கிள் ஓட்டி ஆபத்தான ஸ்டண்ட்களை செய்கிறார். சைக்கிளை ஒருபுறமாக சாய்ப்பதும், திடீரென ஹேண்டிலை திருப்பி வளைத்து வளைத்து ஓட்டுவதுமாக சாலையையே ஸ்டண்ட் ஷோ நடத்தும் மைதானம் போல மாற்றி அத்துமீறியுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் பாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதுவது போல் மிக அருகில் சென்று, கடைசி நொடியில் சைக்கிளை கட் அடித்துத் திருப்புகிறார். இதனால் பயந்துபோன மக்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, அலறியடித்துக் கொண்டு வழியை விட்டு விலகி ஓடுகின்றனர். வீடியோவின் இறுதியில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை என்றாலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடுரோட்டில் இப்படி பொறுப்பற்ற முறையில் ஸ்டண்ட் செய்த வாலிபரின் மீது நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
