தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத் தற்காலிகப் பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்துள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூவரும் அனுபவமிக்க அதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாநில அரசு இந்த மூவரில் ஒருவரை உடனடியாகத் தமிழ்நாட்டின் நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சவால்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளைத் திறம்படக் கையாள ஒரு முழுநேர நிரந்தரத் தலைமை மிகவும் அவசியம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
எனவே, தற்போதைய தமிழக அரசு இன்னும் ஓரிரு நாட்களுக்குள் திறமையான ஒரு அதிகாரியைத் தேர்வு செய்து இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காவல்துறை நிர்வாகம் அரசியல் சார்பின்றிச் செயல்பட எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
