தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
பீகாரில் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவைத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் சட்டப்பூர்வமாக ஒருவரது பெயரைச் சேர்ப்பதற்கான தகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை என்பதை மட்டுமே இந்த நீக்கம் காட்டுகிறது என்றும், இது தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை மட்டுமே தற்காலிகமாகப் பாதிக்கும் என்றும் விளக்கினர்.
அதே நேரத்தில், இந்தியக் குடிமகன் என்ற முறையில் ஒரு நபருக்குக் கிடைக்க வேண்டிய மற்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்க இது ஒருபோதும் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் குடியுரிமையை முழுமையாக ஆய்வு செய்து, அவர்கள் இந்தியக் குடிமக்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பெயர்களை உடனடியாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி இவர்களின் குடியுரிமைத் தகுதியை மத்திய அரசுதான் இறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
