இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ‘அரசன்’ என்ற திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) பிரம்மாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வடசென்னை பகுதி தத்ரூபமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சிம்புவின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமான படைப்பாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்து, நடப்பு 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6-ஆம் தேதி படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் படம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருந்த படத்திற்காகச் சிம்பு கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகத் தனது தலைமுடியை வளர்த்து வந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் கதையைக் கேட்டவுடன் அந்தப் படத்தை ஒத்திவைத்துவிட்டு இந்த கதாபாத்திரத்திற்காகத் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொண்டார் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சிம்பு இந்த கதாபாத்திரமாகவே மாறி இயக்குநர் வெற்றிமாறனின் மனதில் தனி இடம் பிடித்துள்ளதாகவும், படப்பிடிப்பு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுவதாகவும் பாராட்டியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று சிம்பு தனிப்பட்ட முறையில் விடுத்த கோரிக்கையை இயக்குநரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தாணு தெரிவித்துள்ளார்.