இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான எல்லா ரயில் நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பயணி ஷெனாஸ் என்பவர், அங்குள்ள தூய்மையான சூழலையும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையையும் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், “உண்மையை ஒப்புக்கொள்வோம், நாம்தான் உலகிலேயே மிக அழுக்கான நாடு” என்று இந்தியாவின் பொதுச் சுகாதாரக் குறைபாட்டை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்து இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் சுற்றுலா பிம்பத்தைப் பாழாக்குவது அழகான இடங்களின் பற்றாக்குறை அல்ல, மாறாகப் பொதுமக்களிடம் இருக்கும் குப்பை கொட்டும் பழக்கமும், முறையற்ற கழிவு மேலாண்மையும்தான் என்று ஒரு தரப்பு நெட்டிசன்கள் இவருடைய கருத்தை முழுமையாக ஆதரித்துப் பேசி வருகின்றனர்.

இருப்பினும், ஷெனாஸின் இந்த ஒட்டுமொத்தமான பொதுப்படையான கருத்துக்குப் பலரும் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இலங்கையின் மிகச்சிறிய, சுற்றுலாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஒரு சிறிய நகரத்துடன், மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்திய நகரங்களை ஒப்பிடுவது நியாயமற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

“>

 

மேலும், இந்தியாவின் ‘தூய்மை பாரத இயக்கம்’ மூலம் கடந்த சில ஆண்டுகளில் சுகாதார அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், இந்தியாவின் மிகத் தூய்மையான நகரங்களாகக் கருதப்படும் இந்தூர், மைசூரு மற்றும் கேங்டாக் போன்ற இடங்களையும் அவர்கள் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி இந்தியாவிற்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.