“என் பையில வெறும் 10 யுவான் தான் இருக்கு அம்மா.. ஆனா வண்டி வாடகை அதுக்கு மேல போயிருச்சு, போனிலும் சார்ஜ் தீர்ந்துடுச்சு” என்று 10 வயது சிறுவன் டாக்ஸிக்குள் அழுதுகொண்டே தவித்த நெஞ்சை உலுக்கும் சம்பவமும், அதற்கு அந்த ஓட்டுநர் கொடுத்த மாஸ் ரிப்ளையும் சமூக வலைதளங்களில் சும்மா தீயாய் பரவி வருகிறது.

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள சுன்யி பகுதியில் மே 17-ஆம் தேதி, சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக டாக்ஸியில் பயணித்துள்ளான்.

அப்போது பயங்கர போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், மீட்டரில் கட்டணம் ஏறிக்கொண்டே போவதைக் கண்டு பதற்றமடைந்த சிறுவன், தன் தாயை மொபைலில் அழைத்து கதறியுள்ளான். எதிர்பாராதவிதமாக அவனது போனும் சுவிட்ச் ஆஃப் ஆக, செய்வதறியாது தலையை முன் இருக்கையில் சாய்த்து அழுதுள்ளான்.

இதைப் பின்னோக்குக் கண்ணாடியில் கவனித்த வாங் என்ற அந்த டாக்ஸி ஓட்டுநர், “தம்பி அழாதே.. 10 யுவானுக்கு மேல எவ்ளோ வந்தாலும் நான் உன்கிட்ட காசு வாங்க மாட்டேன்” என்று கூறி அவனுக்குப் பாதுகாப்பாகப் புகலிடம் தந்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் இணையத்தில் வெளியாகி, 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று உலகையே நெகிழ வைத்துள்ளது. சிறுவனைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிவிட்ட போது மீட்டரில் 12 யுவான் காட்டிய போதிலும், அவனிடம் இருந்த 10 யுவானை (141 Indian Rupees) மட்டுமே ஓட்டுநர் வாங் வாங்கிக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், “தம்பி, வாய் ஒரு சிறந்த கருவி.. காசு பத்தாதுன்னா ஓட்டுநரிடம் முன்கூட்டியே பேசக் பழகிக்கொள்ள வேண்டும்” என்று அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைப் பாடத்தையும் பொறுமையாகக் கற்றுக்கொடுத்துள்ளார்.

தனக்கும் அதே வயதில் ஒரு மகளும் மகனும் இருப்பதாகக் கூறிய வாங், “நான் மற்றவர்களின் குழந்தைகளை அன்பாக நடத்தினால், என் குழந்தைகளையும் இந்த உலகம் அன்பாக நடத்தும்” என ஊடகங்களிடம் உருகியுள்ளார். இவருக்குப் பாராட்டும் பரிசுகளும் குவிந்த போதிலும், அனைத்தையும் அவர் பெருந்தன்மையுடன் நிராகரித்து மனிதாபிமானத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளார்!