தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தயாராகக் காத்திருந்த மோகித்தின் நண்பர்களான ரித்தீஷ் (19), திலோத் மெர்லின் (21) ஆகியோருடன் சேர்ந்து, அந்த இளம்பெண்ணை அவர்கள் மூவரும் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, அந்தப் பெண்ணிடமிருந்த 2,500 ரூபாய் ரொக்கப் பணம், ஒரு செல்போன் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்களையும் அந்த கும்பல் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளில் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் அதிரடியாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி, புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தலைமறைவாக இருந்த காமுகர்களான மோகித், ரித்தீஷ் மற்றும் திலோத் மெர்லின் ஆகிய 3 பேரையும் கூண்டோடு வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், தற்போது மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீன்பிடி துறைமுகப் பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பலத்த பாதுகாப்புக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
