சமூக வலைத்தளங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் செயலியை, இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் புகைப்படங்களை மட்டுமே பதிவிடும் தளமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் டிக் டாக் தடைக்குப் பிறகு அறிமுகமான ‘ரீல்ஸ்’ வசதி மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இன்ஸ்டாகிராம், பயனர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், பயனர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் ‘ஸ்டோரி’களில் ஏதேனும் எழுத்துப்பிழை, தவறான டேக் அல்லது ஸ்டிக்கர் இருந்தால், அதை நீக்காமல் பதிவிட்ட பிறகே நேரடியாகத் திருத்தம் செய்துகொள்ளும் புதிய ‘எடிட் ஸ்டோரி’ (Edit Story) அம்சத்தை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக சில ஐபோன் பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், மெட்டா நிறுவனத்தின் மற்றொரு பிரபல செயலியான வாட்ஸ்அப்பிலும், இன்ஸ்டாகிராமில் உள்ள ‘நெருங்கிய நண்பர்கள்’ போன்றதொரு புதிய தனியுரிமை வசதி வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் என தனித்தனி பட்டியலை உருவாக்கி, தங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பகிர்ந்துகொள்ள முடியும். தற்போது பீட்டா பயனர்களிடம் சோதனையில் உள்ள இந்த இரு புதிய தொழில்நுட்ப அம்சங்களும், விரைவில் அனைத்துப் பொதுப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
