9இந்திய அரசின் இணையப் பாதுகாப்பு அமைப்பான CERT-In, கூகுள் குரோம்
டெஸ்க்டாப் பயனர்களுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் உலாவியில் பல ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லினக்ஸில் 148.0.7778.178-க்கு முந்தைய பதிப்புகளும், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் 148.0.7778.178 அல்லது 179-க்கு முந்தைய பழைய பதிப்புகளும் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும்.

ஹேக்கர்கள் ஏதேனும் ஒரு போலி லிங்க் மூலமாகப் பயனர்களின் கணினிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், முக்கியமான தனிப்பட்ட தரவுகளைத் திருடவும் இந்த உலாவி குறைபாடுகள் வழிவகுக்கும் என்பதால் அரசு இதனைத் தீவிர அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

இந்த அபாயத்தைத் தவிர்க்க தனிப்பட்ட பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் தங்களது கூகுள் குரோம் உலாவியை உடனடியாகப் புதுப்பிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காகக் கூகுள் நிறுவனம் ஏற்கனவே புதிய பாதுகாப்புப் புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.

பயனர்கள் தங்களது குரோம் உலாவியைத் திறந்து, செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, ‘அபௌட் குரோம்’ என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் புதிய பதிப்பைத் தானாகவே அப்டேட் செய்து கொள்ளலாம்.

இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஹேக்கர்களிடமிருந்து கணினியைப் பாதுகாக்கவும் இந்த எளிய புதுப்பிப்பை உடனடியாகச் செய்யுமாறு இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.