ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸுக்கு தற்போது வரை எந்தவித தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.
இதனால், உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனைச் சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அவசரப் பயண வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள காங்கோ, உகாண்டா மற்றும் அதன் அண்டை நாடான தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியக் குடிமக்கள் யாரும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் உள்ளூர் சுகாதாரத் துறையின் நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
