டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பயன்படுத்தும் சொகுசு நாற்காலி (Office Chair) தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்த நாற்காலி சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நாற்காலி அல்ல என்றும், அதன் விலை சுமார் 66 ஆயிரம் ரூபாய் முதல் 82 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

‘ரெட் ஓக் இம்பீரியோ’ (Red Oak Imperio) என்ற பிராண்டைச் சேர்ந்த அந்த சொகுசு நாற்காலியில், மசாஜ் செய்யும் வசதி, தானியங்கி கால் ரெஸ்ட், மற்றும் நீண்ட நேரம் அமர்ந்தாலும் சோர்வு தராத ‘ஜீரோ கிராவிட்டி’ தொழில்நுட்பம் போன்ற பல ஆடம்பர வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லி மெட்ரோவில் பயணித்து எளிமையைக் காட்டிய பாஜாக-வைச் சேர்ந்த முதல்வர் ரேகா குப்தா, அலுவலகத்தில் இவ்வளவு ஆடம்பர நாற்காலியைப் பயன்படுத்துவதா என எதிர்க்கட்சியினரும் நெட்டிசன்களும் காரசாரமாக விமர்சித்து, மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.

அதேநேரம், “டெல்லி முதல்வராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு உயர் அதிகாரி நீண்ட நேரம் வேலை பார்ப்பதற்கு இதுபோன்ற வசதியான நாற்காலிகள் தேவைதான்; இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை” என்று அவரது ஆதரவாளர்கள் முட்டுக்கொடுத்து முரண்டு பிடித்து வருகின்றனர்.