பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் நடைபெற்ற பார்ட்டியின் போது, கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்கார முயற்சிக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், ரியல் எஸ்டேட் புரோக்கரான ஹெய்னாஸ் என்பவர் மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில் உணவு விடுதியின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து, மாணவியை அந்த நபர் தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் மாணவியை மீட்ட நிலையில், அந்த நபர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கச் சென்ற மாணவிக்கு, காவல்துறையினரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், மாறாக காவல்துறை தனது குணாதிசயத்தை விமர்சித்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஆதரவாளர்கள் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், அதனால் உயிருக்கு பயந்து தான் கேரளாவிற்குச் செல்ல நேரிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
