அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே பெண் பத்திரிகையாளர் ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பத்திரிகையாளர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்த மேஜைக்கு அடியில் தஞ்சம் புகுந்தார். இந்த பதற்றமான காட்சிகள் அனைத்தும் அவர் பேசிக்கொண்டிருந்த கேமராவிலேயே நேரலையாகப் பதிவாகின.

தகவல்களின்படி, தாக்குதல் நடத்திய நபர் சுமார் 20 முதல் 25 ரவுண்டுகள் கண்மூடித்தனமாகச் சுட்டதாகத் தெரிகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன், வெள்ளை மாளிகைக்குள் இருந்த மற்ற பத்திரிகையாளர்களும் அச்சமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் அனைவரும் உடனடியாக பிரஸ் ப்ரீஃபிங் (செய்தியாளர் சந்திப்பு) அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரகசிய சேவைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு வந்தார். அவர் திடீரென தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.

 

சற்றும் தாமதிக்காமல் செயல்பட்ட ரகசிய சேவைப் பிரிவு வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தி அந்தச் சந்தேக நபரைக் சுட்டுக் கொன்றனர். படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள்ளேயேதான் இருந்தார் என்றும், அவர் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார் என்றும் ரகசிய சேவைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.