பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில், ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படைத் தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது,
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அப்போது, திட்டமிட்டபடி ரயில் பாதையின் அருகே வெடிபொருட்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் திடீரென ரயில் மீது மோதச் செய்து வெடிக்க வைத்துள்ளார்.

இந்த அதிபயங்கர வெடிவிபத்தில் ரயிலின் சில பெட்டிகள் பலத்த சேதமடைந்து தடம் புரண்டன. சம்பவ இடத்திலேயே ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, இந்த கொடூரத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலைப்படை’ பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் இராணுவ வீரர்கள் வருவதை அறிந்து அவர்களை குறி வைத்துதான் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.