உத்தரப் பிரதேசத்தில் கேட்போரையே அதிரவைக்கும் ஒரு அரிய மருத்துவ விசித்திரம் அரங்கேறியுள்ளது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் ஒருவர், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ ஒன்று வளர்ந்திருப்பதை உற்று நோக்கி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீவிர ஆய்வுக்குப் பிறகு, அந்த இளைஞரின் வயிற்றுக்குள் “Fetus in Fetu” எனப்படும் அரிய வகை இரட்டை கரு (ஒட்டிப் பிறந்திருக்க வேண்டிய மற்றொரு கருவின் பாகங்கள்) வளர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்குத் தீவிர அறுவை சிகிச்சைசெய்து, அவரது வயிற்றுக்குள் இருந்த 2.5 கிலோ எடையுள்ள அந்தப் பெரிய கருவை பத்திரமாக அகற்றியுள்ளனர்.
ஆண்களுக்குக் கர்ப்பம் தரிக்க சாத்தியமே இல்லாத சூழலில், இந்த 18 வயது இளைஞருக்கு எப்படி வயிற்றுக்குள் கரு வளர்ந்தது என்பது குறித்து மருத்துவர்கள் வியப்பூட்டும் விளக்கத்தை அளித்துள்ளனர். அந்த இளைஞர் தனது தாயின் கருப்பையில் ஒரு சாதாரணக் கருவாக வளர்ந்து கொண்டிருந்தபோதே, அவருடன் வளர வேண்டிய மற்றொரு இரட்டைக் கருவை அவரது உடல் எதிர்பாராதவிதமாகத் தனக்குள்ளேயே உள்வாங்கியுள்ளது.
அப்படி உடலுக்குள் சென்ற கருவின் பாகங்கள் தான், இத்தனைவருடங்களாக அவருக்குள் மறைந்திருந்து இப்போது 2.5 கிலோ எடையாக உருவெடுத்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவ அதிசய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
