ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம் சிவானா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 30 வயது மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிதேஷ் குமார் ஜிங்கர் (32) என்பவருக்கும், காந்தா (30) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 14 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால், காந்தா தனது இரு குழந்தைகளுடன்  தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை அன்று மனைவியைத் தேடி வந்த நிதேஷ் குமார், காந்தாவை வீட்டின் அருகே உள்ள ஒரு தெருவிற்குப் பேசுவதற்காக அழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிதேஷ் குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி காந்தாவின் கழுத்தை  அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த காந்தா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

மனைவியைக் கொன்ற அதிர்ச்சியில், நிதேஷ் குமார் அதே கத்தியால் தனது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியிலும் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், ரத்தம் சொட்டச் சொட்ட கையில் கத்தியுடன் மெயின் ரோட்டை நோக்கி நடந்து வந்த அவர், அங்குள்ள ஒரு கடையின் முன்பு சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த காந்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் பலத்த காயமடைந்த நிதேஷ் குமாரை மீட்ட போலீஸார்,  மருத்துவமனையில் அனுமதித்தனர். இக்கொடூரக் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.