சத்தீஸ்கர் மாநிலத்தில் சேர்ந்த சுக்மானியா என்ற பெண், தனது 90 வயது மாமியார் சோன்வாரியை முதுகில் சுமந்து கொண்டு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய வங்கிக்கு நடந்தே சென்றுள்ளார். அந்தப் பகுதியில் உள்ள வடிகால் காரணமாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத சூழலில், வறுமையில் வாடும் அந்தப் பெண் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காததால் விரக்தியடைந்த மருமகள், இறுதியாகத் தனது மாமியாரைத் தூக்கிக் கொண்டு வங்கிக்குச் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைக் கரைய வைத்துள்ளது. வங்கிக்கு வந்த மருமகள் சுக்மானியா கூறுகையில், “முன்பு வங்கி உதவியாளர் ஒருவர் வீட்டிற்கே வந்து ஓய்வூதியப் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார், ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் வருவதை நிறுத்திவிட்டார்.

முழுமையடையாத கே.ஒய்.சி காரணமாகவே இந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். வங்கிக்கு வந்த அவர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையாக 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இதுகுறித்து நர்மதாபூர் மத்திய வங்கி மேலாளர் மிர்சா அல்தாஃப் பேக் கூறுகையில், “முதியோர்களுக்கு வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்க 8 வங்கி உதவியாளர்கள் உள்ளனர்; குடும்பத்தினர் முன்கூட்டியே வங்கிக்குத் தகவல் தெரிவித்தால், நேரடியாக வீட்டிற்கே உதவியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.