தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமலில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி இந்தச் சிறப்பு கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மடாதிபதிகள் மற்றும் உபயதாரர்கள் போன்றோருக்கு இலவச சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படலாம். ஆனால், பணத்தின் அடிப்படையில் மக்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் இந்தச் சிறப்பு கட்டண தரிசன முறையை அனுமதிக்கக் கூடாது; எனவே இதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் வருகிற 29-ஆம் தேதிக்குள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கட்டண தரிசன முறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.