குறைந்த பட்ஜெட்டில் வெளிநாட்டுப் பயணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்துள்ளது மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாடு. உலகிலேயே மிக அரிதான ‘டபுள் லேண்ட் லாக்ட்’ நாடான இங்கு, இந்திய ரூபாயின் மதிப்பு மிக மிக அதிகம். ஒரு இந்திய ரூபாய் என்பது அங்கிருக்கும் உஸ்பெகிஸ்தானி சோம் (UZS) மதிப்பில் சுமார் 125 ரூபாய்க்கு சமம்.

இதனால், இந்தியாவில் இருந்து வெறும் ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு உஸ்பெகிஸ்தான் சென்றால், அங்குள்ள கரன்சி மதிப்பில் நாம் 1.25 கோடிக்கும் அதிபதியாகி, நிஜமாகவே ஒரு கோடீஸ்வரர் போல ஆடம்பரமாகச் சுற்றி வர முடியும். டெல்லியிலிருந்து தாஷ்கண்ட் செல்வதற்கான விமானக் கட்டணமும் வெறும் 20,000 ரூபாயிலிருந்து தொடங்குவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

​அதிசயிக்க வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, பட்டுப்பாதை நகரங்களான சமர்கண்ட், புகாரா மற்றும் தலைநகர் தாஷ்கண்டின் அழகு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. ஐரோப்பா அல்லது அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இங்கு தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து மற்றும் உலகப் புகழ்பெற்ற கபாப், ப்ளோவ் போன்ற பாரம்பரிய உணவுகளுக்கான செலவு மிக மிகக் குறைவு.

வெறும் 8 முதல் 10 ஆயிரம் ரூபாயில் ஒரு சொகுசான ஹோட்டல் மற்றும் தரமான உணவோடு உஸ்பெகிஸ்தானை ரசிக்க முடியும். இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளும் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளதால், குறைந்த செலவில் ஒரு சொகுசான சர்வதேசப் பயணத்தை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் மிகச்சிறந்த தேர்வாக மாறியுள்ளது.