சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை தலைசுற்ற வைக்கும் வினோதமான ‘தேசி ஜூகாட்’ வீடியோ ஒன்று வெளியாகி, அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அசைவம் சாப்பிடுபவர்களில் பலருக்கு மீனின் கவுச்சி வாடை பிடிக்காது. அந்த வாடையைப் போக்குவதற்காக வீடியோவில் இருக்கும் நபர் செய்த காரியம் ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நபர் மீனின் கவுச்சி வாடை போக வேண்டும் என்பதற்காக, தண்ணீருக்குப் பதில் குளிக்கும் சோப்பை எடுத்து மீன் மீது அக்குவேறாகத் தேய்த்து, நுரை ததும்பக் கழுவியுள்ளார்.
மேலும், மீன் வாடையைப் போக்க இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை என்றும் அவர் அதில் பெருமையாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமையல் கலைஞர்கள், “அடுத்த முறை வாஷிங் மெஷினில் போட்டுவிடுங்கள், வேலை மிச்சமாகும்” என்றும், “மீன் சுத்தமாகிறதோ இல்லையோ, இதைச் சாப்பிட்டால் மனிதன் சுத்தமாகிவிடுவான்” என்றும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
இருப்பினும், சோப்பு அல்லது டிடர்ஜெண்ட்களில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் மீனின் தசைப்பகுதிக்குள் எளிதாக இறங்கிவிடும் என்பதால், இது ஒரு விஷமாக மாறிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீரில் எவ்வளவுதான் கழுவினாலும் இந்த கெமிக்கல்கள் உள்ளேயே தங்கிவிடுவதால், இதைச் சாப்பிடுபவர்களுக்குக் கடுமையான உணவு நச்சுத்தன்மை (Food Poisoning), வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர வயிற்றுப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மீனின் கவுச்சி வாடையைப் போக்க சோப்புக்குப் பதிலாக, நம் வீடுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சை சாறு, உப்பு, வினிகர், சோள மாவு அல்லது மஞ்சள் தூள் மற்றும் கடுகு எண்ணெய் போன்ற பாதுகாப்பான இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது என சமையல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
