மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட வியாபாரி தனக்கு வழங்கப்பட்ட ஆவின் பால் கிரேடில் ஒரு பாக்கெட் பால் குறைவாக இருப்பதை ஓட்டுநரிடம் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், “தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டது, இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதீர்கள், ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்று புதிய தவெகஅரசு அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கும் விநோதமான காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. வியாபாரியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அந்த ஆவின் பால் வண்டி ஓட்டுநர் முறையான பதிலை அளிக்காமல் மழுப்பியுள்ளார்.

“என்னவாக இருந்தாலும் உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுங்கள், முதலில் வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள்” என்று கூறி அவர் தப்பிக்க முயன்ற போதிலும், அந்த வியாபாரி விடாமல் தனக்குரிய சரியான கணக்குப்படி உடனடியாக பால் பாக்கெட்டை தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தச் சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வரும் நிலையில், அரசு நிறுவனமான ஆவின் பால்விநியோகத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உடனடியாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.