முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, இதுவரை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் அதிரடியாக இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைக்கும் வகையில், மிக முக்கியமான இரண்டு துறைகள் இதுவரை யாருக்குமே ஒதுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய இந்த இரண்டு துறைகளும் தற்போதைய அமைச்சர்கள் பட்டியலில் யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய கூட்டணி அரசியல் கணக்கு இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கசிகின்றன.
தவெக அமைச்சரவையில் அடுத்ததாக இடம் பெறப் போகிறார்கள் என்று பலத்த பேச்சுவார்த்தையில் இருக்கும் ஐயுஎம்எல் (IUML) கட்சிக்கு ‘சிறுபான்மையினர் நலத்துறையும்’, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (VCK) ‘ஆதிதிராவிடர் நலத்துறையும்’ ஒதுக்கப்பட உள்ளதாகத் தவெக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளைத் திருப்திப்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் முதலமைச்சர் விஜய் போட்டுள்ள இந்த ரகசிய ஸ்கெட்ச், அரசியல் அரங்கில் அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
