உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில், மனம் பதைக்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவிலிருந்து தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த மருமகன் ஒருவர், சடலத்தை எரிப்பதற்கான சிதையைச் தயார் செய்துவிட்டு, கைகளைச் சுத்தம் செய்வதற்காக நதிக்கரைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு பதுங்கியிருந்த ராட்சத முதலை ஒன்று, அவரைத் திடீரென தாக்கி இழுத்துச் சென்று நீரில் மூழ்கடித்தது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள், அவரை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் முதலை அவரை உயிரோடு இழுத்துச் சென்று கொன்ற இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் வனத்துறையினர், முதலையைக் கண்டறிந்து அந்த நபரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இறுதிச் சடங்கிற்குச் சென்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபரீதம், அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
