தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலுக்கு இணையான அந்தஸ்து ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களிலும் காலை வழிபாட்டின் போது தேசப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடுவது தற்பொழுது அதிரடியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக ஒலிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மேற்குவங்க பள்ளி கல்வித்துறை மற்றும் மதரஸா கல்வி இயக்குநரகம் இந்த அதிரடி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களிலும் காலை வழிபாட்டு கூட்டத்தில் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
