தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்கு உள்ளாகவே மிகச் சரியாகத் தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பஞ்சுவாலிட்டி மற்றும் எளிமையைப் பார்த்துத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர்கள் மிகுந்த வியப்படைந்துள்ளனர்.

முதலமைச்சரின் இந்த முன்மாதிரியான ஒழுக்கத்தைத் தாங்களும் பின்பற்ற வேண்டும் என்று நினைத்த அதிகாரிகள், தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இதே நேர மேலாண்மையைக் கொண்டு வர விரும்பினர். இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகத் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் தங்களின்துறை ஊழியர்களுக்கு வருகை நேரம் குறித்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சரின் வருகை நேரத்தைப் பின்பற்றி, தற்போது இந்த அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்குள் தங்களின் இருக்கைக்கு வருவதை அதிகாரிகள் கட்டாயமாக்கியுள்ளனர்.

பொதுவாகத் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு காலை 10 மணிக்குத் தொடங்கும் பணி நேரம், மாலை 5.45 மணிக்கு நிறைவடையும். இனிவரும் நாட்களில் ஊழியர்கள் அதிகபட்சமாக காலை 10.10 மணி வரை மட்டுமே தாமதமாக வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு மேல் தாமதித்தால் வருகைப் பதிவேடு மூடப்பட்டு ‘ஆப்சென்ட்’ அல்லது விடுப்பு வெட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தங்களின் உத்தரவில் எச்சரித்துள்ளனர்.